பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி
கிருஷ்ணகிரியில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணி வருகிற மே மாதம் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி தலைமையில் கிருஷ்ணகிரியில் அண்ணா நகர் பகுதியில் தொடங்கி, ரெயில்வே காலனி, பூந்தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு, பெரியசாமி தெரு, சென்னை சாலை, வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இந்த கணக்கெடுப்பு பணியில் 6-14 வயதில் 8 குழந்தைகளையும், 15-18 வயதுடைய 11 பேரும், 18 வயதிற்கு உட்பட்ட 21 மாற்றுத்திறன் கொண்டவர்களையும் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. இக்கணக்கெடுப்பில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர். மூன்று குழுக்களாக பிரிந்து 360 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுத்து, கண்டறியப்படும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உரிய ஆலோசனை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story