மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்


மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 6:46 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,621 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றில் வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து உள்ளது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் கேரள மாநில சிறப்பு ஆயுதப்படையை சேர்ந்த 260 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 500 பேர், என்.எஸ்.எஸ். மாணவர்கள் 450 பேர், ஓய்வுபெற்ற போலீசார், தற்போது பணியில் உள்ள போலீசார் என மொத்தம் 2,500 பேர் ஈடுபட உள்ளனர்.

மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளில் 94 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அங்கு கேரள மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் ஒரே இடத்தில் 8 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள பகுதிகளிலும் அவர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மாவட்ட எல்லை பகுதியான வளையப்பட்டி, பரமத்திவேலூர் மற்றும் கொக்கராயன்பேட்டையில் உள்ள சோதனை சாவடிகளிலும் அவர்களே பணியில் ஈடுபடுறார்கள். இதுதவிர ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் அதிவிரைவு படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த பகுதிக்கு உடனடியாக செல்வார்கள்.

மொத்த வாக்குச்சாவடிகளும் 661 இடங்களில் அமைந்து உள்ளன. இந்த இடங்களுக்கு தலா ஒரு போலீஸ் வீதம் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர 30 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த வாக்குச்சாவடிகளுக்கு பெண் போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல 136 சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. இதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story