மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1½ கோடி பறிமுதல் - 4 பேர் கைது, 150 பேருக்கு வலைவீச்சு + "||" + Gunfire in Andipatti, Rs.1½ crore seized in AMMK office

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1½ கோடி பறிமுதல் - 4 பேர் கைது, 150 பேருக்கு வலைவீச்சு

ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1½ கோடி பறிமுதல் - 4 பேர் கைது, 150 பேருக்கு வலைவீச்சு
ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அ.ம.மு.க. அலுவலகத்தில் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 150 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அ.ம.மு.க. ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மாடியிலும் ஒரு அறை உள்ளது. அந்த அறையில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, பணம் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலான போலீசாரும், பறக்கும் படையினரும் அங்கு சென்றனர். அப்போது அந்த அறையில் இருந்து திபு, திபுவென கட்சியினர் வெளியே ஓடினர். இதில் 4 பேர் சிக்கி கொண்டனர்.

பின்னர் அந்த அறையில் இருந்த பண்டல்களை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதற்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், வருமானவரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

தகவலின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, வருமான வரித்துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் அங்கு விரைந்தனர். பணம் இருந்த அறையின் ஷட்டரை மூடி விட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, வணிக வளாகத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது 150-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திடீரென வந்தனர்.

பின்னர் அவர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அந்த அறையின் ஷட்டரை திறந்து பணத்தை அள்ளி செல்ல முயன்றனர். இதனை தடுக்க முயன்ற போலீசாரையும், அதிகாரிகளையும் அவர்கள் தாக்கினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் தற்காப்புக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் 4 ரவுண்டு சுட்டனர். இதனால் அ.ம.மு.க.வினர் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன், தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வணிக வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் வருமானவரித்துறையினர் அந்த அறையில் இருந்த பணத்தை விடிய, விடிய எண்ணினர். மொத்தம் 120 பண்டல்கள் இருந்தன. அதில் ரூ.500, ரூ.100, ரூ.50, ரூ.20 நோட்டுகள் இருந்தன. அந்த அறையில் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரத்து 900-ஐ வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரி நடராஜரத்தினம் புகார் செய்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அ.ம.மு.க. அலுவலக அறைக்கு சென்று சோதனை நடத்தினோம். ஆனால் சோதனை நடத்த விடாமல் அறையை அவர்கள் பூட்டினர். அறையின் கண்ணாடி கதவு வழியாக பார்த்தபோது அங்கு கட்டுக்கட்டாக பண்டல்கள் இருந்தன. உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு போலீசாரும், பறக்கும் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம்.

அப்போது 150-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள், அதிகாரிகளை அடித்து கொன்றால் தான் பணத்தை எடுத்து செல்ல முடியும் என்று கூறி கொலை வெறியுடன் தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் நாகராஜனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் பாலகுருவை தள்ளி விட்டனர். பின்னர் அவர்கள் அறையின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை எடுத்து செல்ல முயன்றனர். இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பணம் எடுத்து செல்வது தடுக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்பேரில் அ.ம.மு.க. வினர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அதிகாரிகளுக்கு கொடுங்காயம் ஏற்படுத்துதல், அவதூறாக பேசி துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அ.ம.மு.க. மாவட்ட துணை செயலாளர் பழனி (வயது 54), ஆண்டிப்பட்டியை சேர்ந்த சுமன்ராஜ் (21), பிரகாஷ்ராஜ் (22), சிலோன் காலனியை சேர்ந்த மது (33) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆண்டிப்பட்டி நகர அ.ம.மு.க. செயலாளர் பொன்முருகன் (47), மாவட்ட மாணவர் அணி செயலாளர் செல்வம் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரோந்து பணியின்போது ரூ.1½ கோடி பறிமுதல்: போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
ரோந்து பணியின்போது ரூ.1½ கோடி பறிமுதல் செய்த போலீசாருக்கு கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
2. கட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கல், அ.ம.மு.க.வினரை விரட்ட ராணுவம் துப்பாக்கிச்சூடு - ஆண்டிப்பட்டியில் பரபரப்பு
ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கி வைத்திருந்த பணம் சிக்கியது. சோதனை செய்ய விடாமல் தடுத்த அ.ம.மு.க.வினரை விரட்ட துணை ராணுவ படையினர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1½ கோடி பறிமுதல் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 697 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.