மலை கிராமத்திற்கு கழுதைகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்


மலை கிராமத்திற்கு கழுதைகளில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே மலை கிராமத்திற்கு கழுதைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

பாலக்கோடு, 

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றை வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. வாகனங்களில் கொண்டு செல்ல முடியாத பகுதிகளுக்கு தலைச்சுமையாகவோ அல்லது கழுதைகளில் ஏற்றியோ அல்லது வேறு வகையிலோ வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு சென்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது வட்டுவனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியிலுள்ள கோட்டூர்மலை, அலகட்டு, ஏரிமலை மூன்று மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கழுதைகள் மூலம் ஏற்றி கொண்டு சென்றனர்.

கோட்டூர்மலைக்கு இவ்வாறு 4 கழுதைகளில் கொண்டு சென்றார்கள். முன்னதாக வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவுக்கான பொருட்களை மூடையில் போட்டு கட்டி ஒவ்வொரு கழுதையிலும் ஒவ்வொரு மூட்டையை ஏற்றினர். பின்னர் சப்–இன்ஸ்பெக்டர் மதலைமுத்து தலைமையில் 4 போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் 7 பேர் உடன் சென்றனர். இவர்கள் கோட்டுர்மலை அடிவாரத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் புறப்பட்டனர். மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்குச்சாவடிகளை அடைந்தனர். அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கோட்டூர்மலை வாக்குச்சாவடியில் மட்டும் 341 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மூன்று கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் 672 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மலை கிராம வாக்குச்சாவடிகளில் மலை கிராம மக்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர்.


Next Story