குமரி மாவட்டத்தில் 1,694 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி கலெக்டர் பார்வையிட்டார்


குமரி மாவட்டத்தில் 1,694 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 17 April 2019 11:00 PM GMT (Updated: 17 April 2019 8:17 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,694 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார்.

நாகர்கோவில்,

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 267 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 40 ஆயிரத்து 83 பெண் வாக்காளர்களும், 159 மூன்றாம் பாலின வாக்காளர்களுமாக மொத்தம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 509 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க வசதியாக குமரி மாவட்டத்தில் 610 இடங்களில் 1,694 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிக்கு வாகன வசதி

இதில் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒன்று என்ற அடிப்படையில் 6 தொகுதிகளிலும் முழுக்க, முழுக்க பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் 6-ம், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடிகள் 6-ம் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வாகன வசதி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், 1950 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவித்தால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிக்க விரும்பும் முதியவர்களில் நடக்க முடியாதவர்களுக்கு வாகன வசதி தேவைப்பட்டால் அவர்களுக்கும் அதற்கான வசதிகள் செய்து தரப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவி போன்றவை அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளுக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் இருந்தும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 310 வாக்குச்சாவடிகளுக்கு பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் இருந்தும், குளச்சல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 300 வாக்குச்சாவடிகளுக்கு தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டன.

பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 270 வாக்குச்சாவடிகளுக்கு பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட 271 வாக்குச்சாவடிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தும், கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 268 வாக்குச்சாவடிகளுக்கு விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார். அப்போது நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், தாசில்தார் அனில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பணியில் சேர உத்தரவு

வாக்குப்பதிவு எந்திரங்களுடன், வாக்குப்பதிவுக்கு தேவைப்படும் எழுதுபொருட்கள், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப் போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு வேனில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 4-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று அந்தந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடந்தது. பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் அலுவலர்களுக்கு அந்த பயிற்சி வகுப்பிலேயே பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று பணியில் சேரவும் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.

7 மணிக்கு தொடங்குகிறது

இதையடுத்து அரசு பஸ்கள் மூலமாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்லவும் தேர்தல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

1,694 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும் வீடியோ பதிவும் செய்யப்பட உள்ளது.

Next Story