கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, மதுரையில் போக்குவரத்து மாற்றம்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை,
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி நாளை (வெள்ளிக் கிழமை) ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வழியிலும், ஏ.வி. மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாகவும் எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. ஒபுளா படித்துறை வைகை தென்கரை பகுதி மற்றும் வைகை வடகரைகளில் கார் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.
தென்கரையில் இருந்து எந்த வாகனமும் ஒபுளா படித்துறை பாலம், ஏ.வி.பாலம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வைகை வடகரைக்கு செல்ல அனுமதி இல்லை. புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு மற்றும் அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் நகரின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களில், கார் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுநத்தம், அழகர்கோவில், மேலூரில் இருந்து கீழவாசல், சிம்மக்கல் மார்க்கமான செல்ல வேண்டிய மாநகர பஸ்கள், கனரக வாகனங்கள், ரேஸ்கோர்ஸ், பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, நீதிமன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, பி.டி.ஆர். பாலம், மருதுபாண்டியர் சிலை சந்திப்பு, காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழையகுயவர்பாளையம் ரோடு, தெற்குவெளிவீதி வழியாக செல்ல வேண்டும்.
இதுபோல், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புதுநத்தம், அழகர்கோவில், மேலூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டபொம்மன் சிலை, தெற்குமாரட் வீதி, மகால் ரோடு, கீழவாசல், காமராஜர் சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர், மேலூர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
தத்தனேரி ரோட்டில் இருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில், மேலூர் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் எல்.ஐ.சி. சந்திப்பு, குலமங்கலம், செல்லூர் வழியாக செல்ல வேண்டும். கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை, டாக்டர் தங்கராஜ் சாலை, ரேஸ்கோர்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி, தல்லாகுளம் சாலை, தெற்குமாசி வீதி, வடக்குமாசி வீதி ஆகிய இடங்களில் நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
மேலும் நகருக்குள் கீழவெளி வீதியில் அம்சவள்ளி சந்திப்பு முதல் கீழவாசல் வரையிலும், கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்தூண் வரையிலும் வடக்கு மாசி வீதியிலும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story