பொதுமக்களுடன் வரிசையில் நின்று கிரண்பெடி, நாராயணசாமி, ரங்கசாமி ஓட்டுப் போட்டனர்


பொதுமக்களுடன் வரிசையில் நின்று கிரண்பெடி, நாராயணசாமி, ரங்கசாமி ஓட்டுப் போட்டனர்
x
தினத்தந்தி 18 April 2019 11:15 PM GMT (Updated: 18 April 2019 10:23 PM GMT)

கவர்னர் கிரண்பெடி, முதல் அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் வேட்பாளர்கள் பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டனர்.

புதுச்சேரி,

சட்டமன்றம் அருகே சுகாதாரத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப் போடுவதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து கிரண்பெடி நடந்து வந்தார். 7.10 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. தேர்தல் ஆணையம் பலகோடி ரூபாய் செலவு செய்து தேர்தலை நடத்துகிறது. இதனை நாம் வீணாக்கக் கூடாது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதோடு நின்று விடாமல் ஆட்சியாளர்கள் என்னை செய்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். புதுவையில் முதல் முறையாக வாக்களிக்கிறேன். மூத்த குடிமகனாக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிப்பதையே விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலக வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். திலாஸ்பேட்டை விநாயகர் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வாக்களித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை அரசு பள்ளி வாக்குச்சாவடியிலும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி ஆனந்தரங்கபிள்ளை மாற்றுத்திறனாளிகள் அரசு பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். லாஸ்பேட்டை ஏசியன் பள்ளி வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் வாக்களித்தார். இதே போல் முதல் முதலில் வாக்களிக்க வந்த இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்தனர்.

Next Story