கணவரை மீட்டு தரக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி


கணவரை மீட்டு தரக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 April 2019 10:15 PM GMT (Updated: 20 April 2019 2:51 PM GMT)

சேலத்தில், கணவரை மீட்டு தரக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், 

சேலம் களரம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி ரேவதி (வயது 29). இவர், நேற்று காலை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்றுக்கொண்டு திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்தவுடன் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக ரேவதியை தடுத்து, அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் ரேவதி கூறும்போது, எனது கணவர் தங்கமணி கட்டிட மேஸ்திரியாக உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கும், மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் எனது கணவர் வீட்டிற்கு வராமல் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். அவர் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் அந்த பெண்ணிடம் கொடுத்து வருகிறார்.

இதனால் நான் எனது குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன், என்றார்.

இதையடுத்து ரேவதிக்கு போலீசார் உரிய அறிவுரை கூறி, டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். பிறகு அவர் அங்கிருந்து சென்றார். கணவரை மீட்டு தரக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story