திட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


திட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 April 2019 10:45 PM GMT (Updated: 20 April 2019 6:51 PM GMT)

திட்டச்சேரி அருகே கட்டி முடிக்கப்பட்டு பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே எரவாஞ்சேரி ஊராட்சியில் நாட்டார் மங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2013-2014-ம் நிதியாண்டில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்து விட்டது. ஆனால் இந்த கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கிராம மக்கள் நகரங்களில் உள்ள அரசு அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ்கள் பெற அலையக்கூடாது என்பதற்காகவும், தங்களுக்கு தேவையான ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை மூலம் பெறக்கூடிய ஒருங்கிணைந்த சான்றிதழ்களை அந்தந்த கிராம சேவை மையத்தில் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளதால், கிராமமக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு நகர்ப்புற பகுதிக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளை கிராம சேவை மைய கட்டிடத்தில் தான் நடத்தி வருகின்றனர்.

இந்த கிராம சேவை மையம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. இந்த சேவை மைய கட்டிடத்துக்கு தற்போது வரை மின்வசதி செய்யப்படவில்லை. கணினி மற்றும் தளவாட பொருட்களும் கொண்டு வரப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story