திருப்பரங்குன்றம் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி பெயிண்டர் தற்கொலை மிரட்டல்
திருப்பரங்குன்றம் அருகே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வருபவர் பீர்மன். இவருடைய மகன் ஜோன்சன் (வயது 25). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அகதிகள் முகாமில் 2 குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ஜோன்சன் அந்த தகராறை விலக்கிவிட்டுள்ளார். அப்போது சிலர் தகராறை விலக்கிவிட்ட ஜோன்சனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜோன்சன் அந்த பகுதியில் உள்ள உயர் மின் கோபுரத்தில் ஏறினார். கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அவர், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜோன்சனிடம் பேசி, கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர் இறங்கி வர மறுத்தார். இதையடுத்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கும், திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தற்கொலை மிரட்டல் விடுத்த ஜோன்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஜோன்சனை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.