நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்
நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல்லில், திருச்சி ரோட்டில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தின் முன்பு நிழலுக்காக ஆஸ்பெட்டாஸ் ஷீட் போடப்பட்டு இருந்தது. உணவகத்தின் சுவர் மீது விளம்பர பலகை ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.
நாமக்கல்லில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து உணவகத்தின் முன்பு உள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுக்கு கீழே சிலர் மழைக்கு ஒதுங்கினர். அப்போது காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் விளம்பர பலகை பொருத்தி இருந்த சுவர் இடிந்து கீழே விழுந்தது. இந்த இடிபாட்டில் மழைக்கு ஒதுங்கியவர்கள் சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாமக்கல் கூட்டுறவு காலனியை சேர்ந்த டாக்டர் கலா (வயது 56) பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு செல்வகுமாரின் மனைவி ஆவார். இதேபோல் தனியார் ஆஸ்பத்திரியின் டிரைவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த மோகன்ராஜ் (39) என்பவரும் இந்த இடிபாட்டில் சிக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் நாமக்கல் ஜெய்நகரை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (39), கணேசபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (70), பொட்டிரெட்டிப்பட்டி போஸ் (45), சிவகாசியை சேர்ந்த மருதுபாண்டியன் (27), புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தை சேர்ந்த முத்தரசன் (30) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமாரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மழைக்கு ஒதுங்கிய பெண் டாக்டர் உள்பட 2 பேர் சுவர் இடிந்து விழுந்து இறந்த சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story