அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பங்களை வாங்க குவிந்த மாணவிகள்


அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பங்களை வாங்க குவிந்த மாணவிகள்
x
தினத்தந்தி 23 April 2019 4:15 AM IST (Updated: 23 April 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பங்களை வாங்க மாணவிகள் குவிந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ், வரலாறு, வணிகவியல், ஆங்கிலம் மற்றும் பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பி.பி.ஏ. உள்ளிட்ட இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை முதல் பிளஸ்-2 முடித்த ஏராளமான மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

இதனால் கல்லூரியில் மாணவிகள் குவிந்தனர். ஒரு மாணவிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி மாணவிகள் பெற்று சென்றனர். கல்லூரியில் வருகிற மே மாதம் 6-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற மே மாதம் 6-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மன்னர் கல்லூரி

இதேபோல புதுக் கோட்டை மன்னர் கல்லூரியில் உள்ள புதிய கலையரங்கில் உள்ள கணினி பதிவு மையத்திற்கு நேற்று காலை முதல் மாணவ, மாணவிகள் தமிழ், வரலாறு, பொருளியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி பயன்பாட்டியல், நிர்வாகவியல், உடற்கல்வி போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் சேர பிளஸ்-1 மதிப்பெண் பட்டியல், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு போன்ற சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வந்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் விண்ணப்பிக்க வருகிற மே மாதம் 10-ந் தேதி கடைசி நாள் ஆகும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story