சேலம் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்


சேலம் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 8:50 PM GMT)

சேலம் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.

சேலம், 

சேலம் செரி ரோட்டில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் உள்பட 19 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் 1,562 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த 15-ந் தேதி முதல் விண்ணப்ப வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இவர்களுக்கான சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. பொதுப்பிரிவினர் ரூ.50 கொடுத்தும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் அதற்கான சான்றிதழை காண்பித்து ஒரு விண்ணப்பத்தை இலவசமாகவும் பெற்று செல்கிறார்கள்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் 20-ந் தேதி முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை வாங்க சேலம் அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., போன்ற படிப்புகள் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அதிகளவில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், இளங்கலை பட்டப்படிப்புக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. தற்போது வரை 2 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும், என தெரிவித்தனர்.

Next Story