இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி, கடலூர் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு


இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி, கடலூர் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 April 2019 4:15 AM IST (Updated: 23 April 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியால் கடலூர் கடலோர பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர்,

இலங்கையில் நேற்று முன்தினம் காலை தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதே நேரத்தில், கொழும்பு அருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது.

இதேபோல் அடுத்தடுத்து ஓட்டல், தேவாலயங்கள் உள்பட மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடித்தது. இந்த நிலையில் நேற்று மாலை கொழும்பு புனித அந்தோணியார் ஆலயம் அருகே நின்றிருந்த ஒரு வேனில் குண்டு வெடித்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக கடலோர பகுதிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் கடலூர் மாவட்டம் கிள்ளை முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை உள்ள கடல் பகுதியில் படகில் ரோந்து சென்றனர்.

அப்போது கடல் வழியாக மர்ம படகுகள் ஏதேனும் வருகிறதா? என்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும் கடலில் பைபர் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம், அறிமுகம் இல்லாத நபர்கள், வெளிநாட்டு படகுகளில் யாரேனும் வந்தால் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். 

Next Story