கரூர் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி பொதுமக்கள் மறியல்


கரூர் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 24 April 2019 4:38 AM IST (Updated: 24 April 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே சாலை விபத்தில் விவசாயி பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி சுபாஷ்சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 75). விவசாயி. இவர், நேற்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு பால்பண்ணைக்கு சென்று கறந்த பாலை கொடுத்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ்புறம் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ்புறம் ஒன்று திரண்டு அங்கு கற்களை அடுக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையும், கரூர்-வெள்ளியணை சாலையும் சந்திக்கும் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. பெரும்பாலானோர் பாலத்தை பயன்படுத்தாமல் அதன் கீழ்புறமுள்ள சாலையில் செல்வதாலேயே விபத்து நிகழ்கின்றன. எனவே பாலத்தின் கீழ்புறம் உள்ள வழியினை அடைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்த மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்த கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பழனிசாமியின் மீது மோதிய வாகனம் எது?, அதனை ஓட்டி வந்தவர் யார்? என்பது பற்றி தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வெங்கக்கல்பட்டி பாலத்தின் கீழ்புறம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய தடுப்புக்கு இடையே இருந்த இடைவெளியில் மண்,கற்களை கொட்டி நிரப்பி அடைத்தனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் மேல்புறத்தில் சென்றன.

Next Story