சொக்கலிங்கபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயம் ரூ.10 லட்சம் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன


சொக்கலிங்கபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயம் ரூ.10 லட்சம் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-25T01:56:05+05:30)

சொக்கலிங்கபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். இதில் ரூ.10 லட்சம் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்துள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், சொக்கலிங்கபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அதனை தொடர்ந்து நேற்று சொக்கலிங்கபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8 மணியளவில் அந்த கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் சீர்வரிசை தட்டுகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஊர் காளைகளை அலங்கரித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சொக்கலிங்கபுரம் திடலில் வாடிவாசலிலிருந்து முதலில் ஊர் காளையும், தொடர்ந்து மற்ற ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 450 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். அப்போது பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். இதில், சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை முட்டி கீழே தள்ளியும், தூக்கி எறிந்தும் ஆக்ரோஷமாக எல்லைக் கோட்டை கடந்து சென்றன. மேலும் சில காளைகள் முடிந்தால் என்னை பிடித்து பார் என்று வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று விளையாடின.காளைகளை அடக்க முயன்ற திருச்சி காட்டூரை சேர்ந்த பிரவீண்(வயது 20), புள்ளம்பாடியை சேர்ந்த சசிகுமார் (27), லால்குடி அருகே உள்ள பின்னவாசலை சேர்ந்த குணா(31), சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (48), கல்லடிகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (28), நாமக்கல் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்த டோனி(18) உள்பட 11 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டியில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் சார்பில் தங்க காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், செல்போன், கடிகாரம், நாற்காலி உள்பட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொய்யாமொழி தலைமையில், கிராம நாட்டார் ஆசை மோகன், தர்மகர்த்தா தெய்வமணி, கணக்கர் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, சந்திரகலா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story