திண்டுக்கல்லில், வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது ‘அண்ணன் சாவுக்கு பழிவாங்கி விடுவார் என நினைத்து கொன்றதாக வாக்குமூலம்’


திண்டுக்கல்லில், வாலிபரை கொலை செய்த 6 பேர் கைது ‘அண்ணன் சாவுக்கு பழிவாங்கி விடுவார் என நினைத்து கொன்றதாக வாக்குமூலம்’
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 8:56 PM GMT)

திண்டுக்கல்லில், வாலிபரை ஓட, ஓட விரட்டிச்சென்று வெட்டி படுகொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணன் சாவுக்கு பழிவாங்கி விடுவாரோ? என நினைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ரவுண்டுரோடு புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் கார்த்திக் (வயது 35). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி அரிவாள், கத்தியால் வெட்டி படுகொலை செய்தது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கார்த்திக்கின் அண்ணன் செல்வம் கொலையில் தொடர்புடைய பாரதிபுரத்தை சேர்ந்த நாட்ராயன் (35) தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நாட்ராயன், அவருடைய நண்பர்களான பாரதிபுரத்தை சேர்ந்த பப்பூன் என்ற பாண்டி (27), ரெட்டியப்பட்டியை சேர்ந்த போத்திராஜா (24), என்.எஸ்.கே.நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), அனுமந்தநகரை சேர்ந்த வெங்கட்ராஜ் (30), வேடப்பட்டியை சேர்ந்த பரமசிவம் (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கார்த்திக்கின் அண்ணன் செல்வம் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்ராயனுக்கும், கார்த்திக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பு உறவினர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. மேலும் கார்த்திக்குக்கு நாட்ராயன் இழப்பீடாக பணமும் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.

மேலும் வெளியே எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கார்த்திக், நாட்ராயனிடம் பழகுவதை குறைத்துக்கொண்டார். இது நாட்ராயனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர், கார்த்திக்கின் நண்பர்களிடம் விசாரித்தார்.

அதில், கார்த்திக் ஒருநாள் மதுபோதையில் இருந்த போது தனது அண்ணன் சாவுக்கு எப்படியாவது பழிவாங்கி விடுவேன் என புலம்பியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நாட்ராயன், எங்கே செல்வத்தின் சாவுக்கு கார்த்திக் தன்னை பழிவாங்கி விடுவாரோ? என்று பயந்தார். மேலும் தன்னை பழிவாங்கும் முன்பு கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதையடுத்து கார்த்திக்கை கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் தனியாக நடந்து செல்வதை பார்த்த நாட்ராயன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story