நெல்லை- தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு


நெல்லை- தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 11:16 PM GMT)

நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்தது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அரசு பெண் அதிகாரி ஒருவர் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களையும் தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, ஆலங்குளம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும், ஓட்டு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஓட்டு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் துணை ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். 2-வது அடுக்கில் ஆயுதப்படை போலீசாரும், 3-வது அடுக்கில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 3 ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி தரை தளத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அகன்ற டி.வி. வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையின் முன்பு வரை, அனுமதி பெற்ற அரசியல் கட்சி நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் என்ஜினீயரிங் கல்லூரி பராமரிப்பு பணிக்காக பணியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story