கள்ளத்தொடர்பு தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை தாய், மகன் உள்பட 3 பேர் கைது


கள்ளத்தொடர்பு தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை தாய், மகன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 10:39 PM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்பு தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தாய், மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூசி, 

தூசி அருகே திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 31), சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பச்சையம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பச்சையம்மாளை அவரது கணவர் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழரசனிடம் கேட்டபோது இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தமிழரசன், அவரது தாய் ராணி, தங்கை சைலஜா மற்றும் சிலர் சேர்ந்து பச்சையம்மாளை தரக்குறைவாக பேசி அடித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த பச்சையம்மாள் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, தூசி சப்- இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், ராணி, சைலஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை தேடி வருகின்றனர்.

Next Story