குமாரபாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை கடிதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை


குமாரபாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை கடிதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 April 2019 3:45 AM IST (Updated: 27 April 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் அருகே, பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் தோப்புக்காடு பகுதியில் வசிப்பவர் குமார். இவர் ஈரோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லோகு பிரபாவதி (வயது 27). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நோதீஸ் (3) என்ற மகன் உள்ளான். லோகு பிரபாவதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது லோகு பிரபாவதி, வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்காமல் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் முடியவில்லை.

இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். பின்னர் அங்கு இறந்து கரிக்கட்டையாக கிடந்த லோகு பிரபாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் லோகு பிரபாவதி சில கடிதங்களை எழுதி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். லோகு பிரபாவதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் விசாரணை நடத்த உள்ளார்.

Next Story