பானி புயல் பாதிப்புகளை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் தகவல்


பானி புயல் பாதிப்புகளை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 April 2019 10:45 PM GMT (Updated: 26 April 2019 8:23 PM GMT)

பானி புயல் பாதிப்புகளை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

வங்க கடலில் இலங்கை பகுதியில் தற்போது புதிதாக பானி புயல் உருவாகி வருகிறது. இந்த புயலால் தமிழகத்தில் கடும் மழை பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வானிலை மையத்தின் அறிவுரைப்படி தமிழகத்தில் மையம் கொண்டுள்ள பானி புயல் காரணமாக வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகளில் அதிக அளவு மழை மற்றும் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

குறிப்பாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகம் தங்களுக்குட்பட்ட நகர்ப்பகுதியிலிருந்து கிராமப்பகுதிகள் வரை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அப்போது கடந்த காலங்களில் மழை பெய்த போது எந்தந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டன என்பதை கண்டறிந்து வரும் காலங்களில், அதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வேளாண்மைத்துறையைப் பொறுத்தவரை கள ஆய்வு மேற்கொண்டு, மழை மற்றும் அதிக அளவு காற்றினால் விவசாயங்கள் பாதிக்கப்பட்டால் உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் விவசாயிகளுக்கான முழுமையான இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க முடியும். அதற்கு பணியாளர்கள் களப்பணியில் இருந்தால் மட்டுமே தான் உறுதி செய்ய முடியும்.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் மழைக்காலங்களின் போது பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தங்குதடையின்றி வழங்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட குளங்களின் கரைப்பகுதிகள் சரியாக உள்ளதா என கண்காணித்து வருவதுடன் வரத்துக்கால்வாய்கள் சீர்செய்யப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், கால்நடைப் பராமரிப்புத்துறை, மாவட்ட வழங்கல்துறை, பொது சுகாதாரத்துறை ஆகியத் துறைகள் தங்களுக்குரிய பணிகளை குறித்த காலத்திற்குள் மேற்கொள்ளும் வகையில் பணியாளர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வதுடன் தேவையான உபகரணங்களையும் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மூலம் தங்கள் பணியாளர்களை தயார்நிலைப்படுத்திக் கொள்வதுடன் உபகரணங்களும் போதிய அளவு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது கிராமப்பகுதிகளில் ஏற்படும் மின் கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். அதேபோல கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறைகள் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும், மேலும் குளோரினேசன் செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற அவசரகாலக் கட்டங்களில் தன்னார்வத் தொண்டு அமைப்புகள், என்.எஸ்.எஸ்., கல்லூரி மாணவர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல் பாதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் மற்றும் தகவல் குறித்து பொதுமக்களும் கட்டணமில்லா 1077 என்ற எண்ணிற்கு தகவல்களை தெரிவிக்கலாம்.

மேலும், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை பணிகளை திட்டமிட்டு செயல்படுவதுடன் பானி புயலின் போது மாவட்டத்தில் எந்த ஒரு உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி, ஈஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் பிரித்தி பார்கவி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, ஊராட்சித்துறை உதவி இயக்குனர் விஜயநாதன், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் சுந்தரராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story