மாவட்ட செய்திகள்

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுப்பு + "||" + See also statues of sculpture while digging up the building grid

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுப்பு

கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுப்பு
அறந்தாங்கி அருகே கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது மேலும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ளது கோங்குடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சிவன்கோவில் அருகே ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 25-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது அம்மன் சிலை மற்றும் சிலை வைக்கும் உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டது.


இதுகுறித்து அறந்தாங்கி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் சூரியபிரபு சம்பவ இடத்திற்கு வந்து அம்மன் சிலைகளை கைப்பற்றி தனது அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.

மேலும் 3 சிலைகள்

இதையடுத்து சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடம் அருகே மேலும் 2 சிலைகள் இருந்ததற்கான தடயம் உள்ளது. அந்த சிலைகளை எடுத்தவர்கள் தங்களிடம் ஒப்படைக்கும்படி அறந்தாங்கி தாசில்தார் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து நேற்று காலையில் கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டும் பகுதிக்கு அருகே பார்த்தபோது, 3 சிறிய சிலைகளை பொதுமக்கள் கொண்டுவந்து வைத்து சென்று உள்ளனர்.

நடராஜர் சிலை

இதையடுத்து நேற்று மீண்டும் அதே பகுதியில் பள்ளம் தோண்டியபோது 4 அடி உயரத்தில் நடராஜர் சிலையும், 3 அடி உயரத்தில் பீடம், 3 அடி உயரத்தில் அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து அந்த சிலைகளும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. இது குறித்து அறந்தாங்கி தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோங்குடியில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து சிலைகளும் ஐம்பொன்னால் ஆனதா? உலோகத்தால் ஆனதா? என்பது குறித்து ஆய்வுக்கு பின்னர் தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.