திருவள்ளுரில் இருந்து ஆழ்குழாய்களில் குடிநீர் எடுக்கும் பணி தீவிரம் சென்னையில் வினியோகம் தொடக்கம்


திருவள்ளுரில் இருந்து ஆழ்குழாய்களில் குடிநீர் எடுக்கும் பணி தீவிரம் சென்னையில் வினியோகம் தொடக்கம்
x
தினத்தந்தி 30 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-30T22:55:41+05:30)

ஏரிகள் வறண்டு போனதால் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக திருவள்ளூரில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை,

பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை பெருநகருக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் 550 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டரும், கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து 200 மி.லி., போரூர் அருகில் உள்ள கல்குவாரியில் இருந்து 80 மி.லி. இத்துடன் ஏரிகளில் இருக்கும் தண்ணீரில் 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருக்கும் தண்ணீரும் சுமார் 10 நாளைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் மாற்று வழி மூலம் தண்ணீர் பெற சென்னை குடிநீர் வாரியம் இறங்கி உள்ளது.

கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்பு செட்டுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு சென்னை மாநகருக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதேபோன்று இந்த ஆண்டும் விவசாய பம்பு செட்டுகளில் இருந்து தண்ணீர் பெறுவதற்காக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், புல்லரம்பாக்கம், வெள்ளியூர், கீழனூர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து சோதனை அடிப்படையில் தண்ணீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர தாமரைப்பாக்கம் அடுத்த மாகரல் பகுதியில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள நீர் ஏற்று நிலையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தற்போது எடுக்கப்படும் தண்ணீர் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையத்தில் ஏற்கனவே 7 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. அவற்றுடன் மேலும் 7 ஆழ்குழாய் கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த 14 ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தினசரி 16 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதுதவிர விவசாயிகளுக்கு சொந்தமான மாகரல் பகுதியில் 35 கிணறுகள், கீழனூர் பகுதியில் உள்ள 35 கிணறுகள், திருவானூர் கண்டிகையில் 20 கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான மின்சார மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட பணி மே 15-ந்தேதியில் இப்பகுதியில் இருந்து படிப்படியாக உயர்ந்து 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுதவிர பூண்டி ஏரியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 45 மில்லியன் லிட்டர் மற்றும் அருகில் உள்ள அத்னதங்கி காவனூரில் இருந்து 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கவும் திட்டமிடப்பட்டு ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. இதன் மூலம் மே மாதம் முழுவதும் சென்னை மாநகருக்கு தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து அதிகாரிகள் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

ஏரிகளில் தண்ணீர் வற்றி போனாலும் சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு போதுமான நீர் ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக வீராணம் ஏரியில் இருந்து 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பம்பு செட்டுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான மாகரல் என்ற இடத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதுதவிர சென்னை மாநகரை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாகவும் முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தற்போது கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. எனவே கோடைமழை பெய்தால் ஓரளவு ஏரிகளில் தண்ணீர் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story