இலவங்கார்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி வட்டார வளர்ச்சி அதிகாரி பார்வையிட்டார்


இலவங்கார்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி வட்டார வளர்ச்சி அதிகாரி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 30 April 2019 11:00 PM GMT (Updated: 30 April 2019 8:32 PM GMT)

இலவங்கார்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன் பார்வையிட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட 44 கிராம ஊராட்சிகளிலும் டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவாரூர் அருகே இலவங்கார்குடி ஊராட்சியில் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரி வாசுதேவன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில்,

ஒவ்வொரு ஊர்களிலும் வீடு, வீடாக சென்று சுத்தம் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்தும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வீடுகள் அருகில் தேவையற்ற தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் மழை நீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும். இதுபற்றி பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் டெங்குவை தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என கூறினார்.

அப்போது அவருடன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடதோத்தாத்திரி உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story