நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வேட்பாளர் 92 முகவர்களை நியமிக்கலாம் - கலெக்டர் தகவல்


நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வேட்பாளர் 92 முகவர்களை நியமிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 April 2019 10:45 PM GMT (Updated: 2019-05-01T03:18:29+05:30)

நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு வேட்பாளர் மொத்தம் 92 முகவர்களை நியமிக்கலாம் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

தேனி,

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18–ந்தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 23–ந்தேதி நடக்கிறது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–

வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாகவும், ஒரு மேஜைக்கு ஒரு முகவர் வீதம் 14 மேஜைகளுக்கு 14 முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு 1 முகவர் என ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 15 முகவர்களை நியமிக்கலாம்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அந்த வகையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 90 முகவர்களையும், தபால் வாக்கு எண்ணிக்கைக்கு மேஜைக்கு தலா 2 முகவர்களையும் என மொத்தம் 92 முகவர்களை ஒவ்வொரு வேட்பாளரும் நியமிக்கலாம்.

முகவர்களை நியமனம் செய்து விட்டு, அதற்கான படிவம் 18–ஐ பூர்த்தி செய்து அதன் 3 நகல்கள், அஞ்சல் வில்லை அளவில் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகளையும் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வருகிற 10–ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வேட்பாளர்களால் நியமனம் செய்யப்பட்ட முகவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும். வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் காலை 7 மணிக்கு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலரின் முன்பாக படிவம் 18 மற்றும் அடையாள அட்டையுடன் வருகை தர வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு முகவர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர்கள் கொண்டு வரும் செல்போன்களை அதற்கென்று தனியாக உள்ள அறையில் ஒப்படைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வாக்குச்சாவடி மையங்களின் மூலம் வழங்கப்பட்ட படிவம் 17சி மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

முகவர்களின் வாகனங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட வேண்டும். முகவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்ல வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜைகளில் மட்டுமே பணியாற்ற வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கையின் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் பணியில் இருப்பார்கள். மத்திய அரசு பணியாளரான ஒரு நுண்பார்வையாளரும் உடனிருப்பார்.

தபால் வாக்கு சீட்டு எண்ணிக்கைக்கு நியமனம் செய்யப்பட்ட முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜை அருகில் இருந்து மட்டுமே கண்காணிக்க வேண்டும். தபால் வாக்கு சீட்டு எண்ணிக்கை தொடங்கிய அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் நாள் அன்று காலையில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும். அங்கிருந்து வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story