பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கோடைகால நுண்கலை பயிற்சி முகாம் தொடக்கம்


பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கோடைகால நுண்கலை பயிற்சி முகாம் தொடக்கம்
x
தினத்தந்தி 2 May 2019 10:30 PM GMT (Updated: 2 May 2019 7:58 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவர்களுக்கான கோடைகால நுண்கலை பயிற்சி முகாம் தொடங்கியது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறுவர்- சிறுமிகளுக்கான நுண்கலைகளில் கோடைகால இலவச சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைப்பிரிவுகளில் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கான அந்தந்த பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

10-ந் தேதி வரை...

குரலிசைக்கு இலக்கியாவும், பரதநாட்டியத்திற்கு பாலபாரதியும், ஓவியத்திற்கு ஹேமாஸ்ரீயும், சிலம்பத்திற்கு முருகேசன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 200-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி வருகிற 10-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. பயிற்சி நிறைவில் சிறுவர்- சிறுமிகளுக்கு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் நடராஜன் செய்திருந்தார். 

Next Story