லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி மர்மச்சாவு - கோவை அருகே குளத்தில் பிணமாக மிதந்தார்


லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி மர்மச்சாவு - கோவை அருகே குளத்தில் பிணமாக மிதந்தார்
x
தினத்தந்தி 3 May 2019 10:45 PM GMT (Updated: 3 May 2019 5:59 PM GMT)

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன அதிகாரி கோவை அருகே குளத்தில் பிணமாக மிதந்தார்.அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரமடை,

கோவை உருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). இவர் கோவை கவுண்டர் மில் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சாந்தாமணி என்கிற மனைவியும், ரோகின் குமார், பிரவீன் குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு பழனிச்சாமி வேலைக்கு செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் 10 மணிக்கு அந்த நிறுவனத்தில் இருந்து பழனிச்சாமி வேலைக்கு வரவில்லை என்று சாந்தாமணிக்கு தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து சாந்தாமணி மற்றும் குடும்பத்தினர் பழனிச்சாமி வேலைக்கு செல்லாமல் எங்கே சென்றார் என்று தேடி உள்ளனர். இதற்கிடையில் காரமடை அருகே வெள்ளியங்காடு குட்டையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்த தகவல் அவர்கள் குடும்பத்துக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பழனிச்சாமி பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பழனிச்சாமி தனது நிறுவனத்தில் நடந்த வருமான வரிசோதனையையொட்டி தன்னிடம் நடந்த விசாரணை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பழனிச்சாமியின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது:- கோவையில் உள்ள மார்ட்டினின் நிறுவனத்தில் பல்வேறு தரப்பினரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமியை வருமானவரித்துறையினர் கடந்த 30-ந் தேதி முதல் விசாரித்து வந்துள்ளனர். அப்போது அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்த அவர் தனது கையை அறுத்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் குளத்தில் பிணமாக மிதந்துள்ளார். தற்கொலை செய்ததாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் சாவில் சந்தேகம் உள்ளது. ஆகவே இது குறித்து போலீசார் மேல் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையில் மார்ட்டின் நிறுவனத்தை சோதனை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனங்களில் நாங்கள் சோதனை நடத்தினோம். இதை தொடர்ந்து மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்த பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வந்தார். அப்போது அவர் கையில் ரத்த காயத்துடன் கட்டு இருந்தது. இதன் பின்னர் எங்கள் விசாரணை முடிந்ததும் அவர் சென்று விட்டார். நேற்று விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதுகுறித்து போலீசாருக்கு மேற்கொண்டு தகவல் தேவைப்பட்டால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story