பருவமழை காலத்தில் கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க புழல் ஏரி தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது


பருவமழை காலத்தில் கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க புழல் ஏரி தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
x
தினத்தந்தி 5 May 2019 10:30 PM GMT (Updated: 5 May 2019 4:56 PM GMT)

புழல் ஏரி தூர்வாரும் பணியுடன், கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பருவகால மழை மூலம் கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் புழல் என்ற இடத்தில் செங்குன்றம் ஏரி என்று அழைக்கப்படும் புழல் ஏரி உள்ளது. சென்னை மாநகருக்கு குடிநீர் எடுக்கப்படும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் ஒன்று. மழைநீரை தேக்கி வைக்கும் நீர்த்தேக்கமாகும். 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் அடியாகும். தற்போது இந்த ஏரியின் ஒரு பகுதியில் மட்டும் அதாவது ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் ஏரியின் ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மோட்டார்கள் உதவியுடன் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

ஏரி பராமரிக்கும் பணியை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. பருவ மழை மூலம் தண்ணீரை முழுமையாக சேமித்துவைப்பதற்காக புழல் ஏரியின் சுற்றுச்சுவர் பலப்படுத்துவதுடன், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கொள்ளளவை அதிகரிப்பதற்காக ஏரியின் உட்பகுதியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

புழல் ஏரி ரூ.173.51 கோடி மதிப்பில் வருவாய் ஈட்டும் வகையில் தூர்வாரும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். ஏரியில் இருந்து தூர்வாரப்படும் மண் விற்பனை செய்யப்படுவதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், ஏரியும் தூர்வாருவதற்கான பணிகள் நடந்துவருகிறது. இதுதவிர ரூ.9 கோடி மதிப்பில் ஏரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

குறிப்பாக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் மதகு இருக்கும் பகுதிகள், ஏரியின் சுற்றுச்சுவர் பலப்படுத்துதல், வெள்ள அபாய தடுப்பு சுவர் அமைத்தல், பலவீனமான கரைகள் பலப்படுத்துதல், ஏரியில் சாலை வசதி, கைப்பிடி சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தப்பணியை பொறுத்தவரையில் 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதம் உள்ள பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. வரவிருக்கும் பருவகால மழையின்போது கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் சேமித்துவைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story