கள்ளக்காதலியை தேடி வந்த தொழிலாளி தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீசார் விசாரணை


கள்ளக்காதலியை தேடி வந்த தொழிலாளி தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-06T00:33:04+05:30)

கள்ளக்காதலியை தேடி அரூர் வந்த தொழிலாளி தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குளித்தலை பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவருடைய மகன் மாரியப்பன் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்த அற்புதம்(27) என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.

இந்தநிலையில் மாரியப்பனுக்கும், அற்புதத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து அற்புதம் ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவர் திருப்பூர் செல்லவில்லை. இதனால் மாரியப்பன் கள்ளக்காதலியை தேடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பையர்நாயக்கன்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அங்கு அவர், கள்ளக்காதலி அற்புதத்தை சந்தித்து திருப்பூருக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று மாரியப்பன் அந்த பகுதியில் உள்ள புளியந்தோப்பில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் அடித்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை தேடி வந்த தொழிலாளி தூக்கில் மர்மமான முறையில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story