மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: லேப்–டெக்னீசியன் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு: லேப்–டெக்னீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2019 11:22 PM GMT (Updated: 2019-05-06T04:52:03+05:30)

காதல் திருமணம் செய்த மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் லேப்–டெக்னீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி காந்திநகர் 2–வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21), லேப்–டெக்னீசியன். இவர் தன்னுடன் படித்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சந்தியா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சந்தியா தனது கணவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதன்பின் சதீஷ்குமார் தனது மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சந்தித்து சமாதானம் பேசி, குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சந்தியா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சதீஷ்குமார் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை குரும்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெங்கடேசன், தான் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல், மது குடித்து செலவு செய்து வந்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story