அஞ்செட்டி அருகே 30 அடி பள்ளத்தில் போர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி 12 பேர் படுகாயம்


அஞ்செட்டி அருகே 30 அடி பள்ளத்தில் போர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 May 2019 4:45 AM IST (Updated: 7 May 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே 30 அடி பள்ளத்தில் போர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை, 

கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே உள்ள கோடிஹள்ளி பகுதியில் இருந்து போர்வெல் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டம் ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் டிரைவர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் என மொத்தம் 14 பேர் பயணம் செய்தனர். அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வழியாக பிலிகுண்டுலு பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அஞ்செட்டி அருகே நாட்ராம்பாளையம் - பிலிகுண்டுலு இடையே கொண்டை ஊசி வளைவு ஒன்றில் லாரி சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரிக்கு அடியில் 14 பேரும் சிக்கி கொண்டனர்.

மேலும் இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த போதிராம் (வயது 22), லல்லுசிங் (30) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள். மற்ற 12 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுப்சிங் (18), ராஜ்குமார் (20), புவனேஸ்ராஜ் (22), பிதம்ராஜ் (23), கலாய் ராம் (20), நவீன் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (28) உள்பட 12 பேரை மீட்டனர். பின்னர் அவர்களை தர்மபுரி மற்றும் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த போதிராம், லல்லுசிங் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

30 அடி பள்ளத்தில் போர்வெல் லாரி கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story