அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்


அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 May 2019 10:30 PM GMT (Updated: 6 May 2019 8:10 PM GMT)

அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மொட்டணம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்கள் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் வசித்து வந்தோம். இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் பகுதி நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டது.

அதற்கு பதிலாக மொட்டணம்பட்டியில் நிலம் கொடுக் கப்பட்டது. மேலும் அவற்றுக் கான பட்டாவும் வழங்கப்பட்டது. அங்கு நாங்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தோம். ஆனால் குடிநீர், சாக்கடை கால்வாய், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தோம்.

இந்த நிலையில் நாங்கள் வசித்து வந்த குடிசைகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் எங்களால் அங்கு வசிக்க முடியவில்லை. இதையடுத்து மீண்டும் பேகம்பூருக்கு வந்து தற்காலிக குடிசை அமைத்து அதில் வசிக்கிறோம். எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுப்பதுடன் அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என கேட்டு கலெக்டரிடம் புகார் மனு அளிக்க வந்தோம் என்றனர்.

இதையடுத்து பேசிய போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் எந்த அதிகாரிகளிடமும் தற்போது நேரடியாக மனு அளிக்க இயலாது. ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார்மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் மனுக்களை போட்டுச்செல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதையடுத்து பொதுமக்கள் அந்த பெட்டியில் தங்களின் மனுக்களை போட்டுச்சென்றனர்.

இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள ஏ.வி.பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.பட்டி, நன்னி ஆசாரியூர், நரசிங்கபுரம், தொட்டயகவுண்டனூர், நாடுகண்டனூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு 2 வார்டுகளாக இருந்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் முறையாக கிடைத்து வந்தது. தேர்தலில் வாக்களிப்பதற்கும் எளிமையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 வார்டுகளையும் இணைத்து ஒரே வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அரசின் சலுகைகளை பெறுவதில் எங்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே முன்பு இருந்தது போல் தனித்தனி வார்டுகளாக பிரித்து, ஏ.வி.பட்டியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று கேட்டு கலெக்டரிடம் புகார் மனு அளிக்க வந்தோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். அதையடுத்து பேசிய போலீசார், மனுக்களை புகார்மனு பெட்டியில் போட்டுச்செல்லும்படி கூறினர். பின்னர் பொதுமக்கள் அந்த பெட்டியில் தங்கள் மனுக்களை போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story