தொழிலாளியின் மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி


தொழிலாளியின் மகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-07T03:19:36+05:30)

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளியின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன், தொழிலாளி. இவர் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகளை அரசு வேலையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நான் கடந்தாண்டு ஈடுபட்டிருந்தேன். அந்த சமயம் விஷாரம் காலனியை சேர்ந்த எனது நண்பர் மூலம் குடியாத்தம் தாலுகா வளத்தூரை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார்.

அந்த நபர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும் கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், ரூ.2 லட்சம் கொடுத்தால் அங்கு வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்தார்.

இதனை உண்மை என நம்பிய நான் கடந்தாண்டு மார்ச் 9-ந் தேதி அவரிடம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். பணம் கொடுத்து பல மாதங்களாகியும் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து அவரை பற்றி கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது, அங்கு அவர் வேலை பார்க்கவில்லை என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நான் கொடுத்த ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுக்கும்படி அவரிடம் கேட்டேன். ஆனால் இதுவரை பணத்தை திருப்பிக்கொடுக்காமல் மோசடி செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரூ.2 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Next Story