ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது; தனுஷ்கோடியில் சீற்றமாக காணப்பட்டது


ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது; தனுஷ்கோடியில் சீற்றமாக காணப்பட்டது
x
தினத்தந்தி 7 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-07T22:38:32+05:30)

ராமேசுவரத்தில் நேற்று கடல் உள்வாங்கியது. அதே நேரத்தில் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, அக்னிதீர்த்த கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள பாறைகள், பாசிகள் வெளியே தெரிந்தன.

உள்வாங்கிய கடலை அங்கு புனித நீராட வந்த ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வியப்புடன் பார்த்தனர்.

இதற்கிடையே தனுஷ்கோடி பகுதியிலும் சூறாவளி காற்று வீசியது. ஆனால் அங்கு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக கரையில் மோதின.

எம்.ஆர்.சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான சாலையில் புழுதி பறந்ததால் ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் சில இடங்களில் சாலையை, காற்றில் பறந்த மணல் தேங்கி மூடியது.

கடல் சீற்றம் காரணமாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை தாண்டி கடல் அலையானது பல அடி உயரத்திற்கு ஆக்ரோ‌ஷமாக எழுந்தது. பாம்பன், தங்கச்சிமடம் கடல் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசியது.


Next Story