கோபியில், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்


கோபியில், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 7 May 2019 11:00 PM GMT (Updated: 7 May 2019 5:09 PM GMT)

கோபியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தூர்,

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த மாதம் 30–ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்கால்களுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கூகலூர், புதுக்கரைப்புதூர், பொலவக்காளிபாளையம், கணபதிபாளையம், சவண்டப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை கோபி மொடச்சூர் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றுகூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளை திடீரென முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தடப்பள்ளி வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் இல்லை. இதனால் நெற்பயிர்கள் கருகி வருகிறது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலில் 7 நாட்கள் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்த உதவி பொறியாளர் செந்தில்குமாரிடம் மனு கொடுத்துள்ளோம்,’ என்றனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story