கணவருக்கு 2-வது திருமணம்: மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற மருமகள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூரம்


கணவருக்கு 2-வது திருமணம்: மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற மருமகள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூரம்
x
தினத்தந்தி 9 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம் அடைந்து மாமனாரை உயிரோடு எரித்துக்கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நெமிலிகாலனி ராஜாத்தி தெருவை சேர்ந்தவர் சபாபதி (வயது 68). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (38). இவருக்கும், சென்னை மாதவரத்தை சேர்ந்த சுப்பிரமணி - கலைவாணி தம்பதியின் மகள் காயத்திரி (34) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்குமுன்பு பிரபாகரன் விபத்துக்குள்ளானார். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத்தகராறில் காயத்திரி கணவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் பிரபாகரனுக்கு அவரது தந்தை சபாபதி, கடந்த சில மாதங்களுக்குமுன்பு வேறு ஒரு பெண்ணுடன் 2-வது திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த காயத்திரி தன் தாய் கலைவாணியுடன் நெமிலிக்கு வந்து அங்கேயே குடிசை அமைத்து தங்கினார். பின்னர் கணவர் மற்றும் மாமனாருடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் சபாபதி தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மீது தீப்பிடித்து எரிந்தது. தீயில் கருகிய சபாபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சபாபதி போலீசார் மற்றும் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தபோது மருமகள் காயத்திரியும், அவரது தாயார் கலைவாணியும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள்’ என்று தெரிவித்தார். பின்னர் அவர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருத்தணி துணை சூப்பிரண்டு சேகர் தலைமையில் கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து காயத்திரி மற்றும் அவரது தாயார் கலைவாணி ஆகியோரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனாரை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story