திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 9 May 2019 10:00 PM GMT (Updated: 9 May 2019 5:52 PM GMT)

திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு மர்ம நபர்கள் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மண்ணரை பகுதியில் கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பாவதி அம்மாள் நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வுகள் முடிவடைந்து மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் பள்ளி அலுவலகம் மட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பள்ளிக்கு ஒரு தபால் வந்துள்ளது. இந்த தபாலை வாங்கிய பள்ளி காவலாளி, அதை அருகில் உள்ள தலைமை ஆசிரியை செல்வியின் வீட்டில் சென்று கொடுத்துள்ளார். அந்த கடிதம் எஸ்.பாத்திமா, w/o அக்பர்அலி, 55, ஊத்துக்குளி மெயின் ரோடு, மண்ணரை, திருப்பூர். என்ற முகவரியில் இருந்து வந்திருந்தது. அந்த தபாலை தலைமை ஆசிரியை பிரித்து படித்து பார்த்த போது, அதில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:-

திருப்பூர் மாவட்டம் மண்ணரை, மணியகாரம்பாளையம், ஆத்துப்பாலம் அருகே நடந்து வரும் சூதாட்ட விடுதி மற்றும் பார் மதுவிற்பனை போன்ற அனைத்து குற்ற செயல்களும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது. சூதாட்ட விடுதியில் குட்கா விற்பனை நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை போல, இங்கும் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி பார் நாகராஜன் போன்று, திருப்பூர் பார் கண்ணப்பன் மற்றும் அழகர் ஆகியோர் இதை முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

இதற்கு திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முழு பொறுப்பாகும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகளை கடத்தி வந்து வீடியோ எடுத்து அதை அந்த மாணவிகளுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பாலியல் செயல்களுக்கு அழைக்கிறார்கள். இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உடந்தையாக இருந்து வருகிறார். இந்த சூதாட்ட விடுதியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும். இதுவே இறுதி எச்சரிக்கை. இந்த சூதாட்ட விடுதியினால் எங்கள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இப்படிக்கு,

சிறுபான்மையினர் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை படித்ததும் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட மாநகராட்சி பள்ளிக்கு விரைந்து சென்று அங்கு ஆய்வு நடத்தினார்கள். மேலும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், பள்ளி வளாகம், வகுப்பறைகள், அலுவலகங்கள், தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

மேலும், அந்த பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள வீட்டோரங்களிலும் சோதனை நடத்தியதுடன், அந்தப்பகுதியில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதுகுறித்த தகவல் அந்த பகுதியிலுள்ள பொதுமக்களிடையே பரவியது. எனவே வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு ஏராளமானோர் கூடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடிதத்தில் எழுதப்பட்டிருந்த முகவரி உண்மையானது தானா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story