நான்குவழிச்சாலை அமைக்கும் பணியின்போது டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு


நான்குவழிச்சாலை அமைக்கும் பணியின்போது டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 9 May 2019 10:15 PM GMT (Updated: 9 May 2019 7:20 PM GMT)

தாராபுரம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின்போது டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாராபுரம்,

திருப்பூர் அருகே உள்ள அவினாசிபாளையத்தில் இருந்து தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக டிப்பர் லாரி, மண் அள்ளும் எந்திரங்கள் போன்றவை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு பெரும்பாலும் வெளியூரை சேர்ந்தவர்கள் தான் டிரைவர்களாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம், கொத்தன்குளம் அருகே உள்ள வாளன்குளத்தை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் கார்த்திக் (வயது 29) என்பவர், ஒரு ஒப்பந்ததாரரிடம் டிப்பர் லாரிக்கு டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாராபுரம் புறவழிச்சாலையில் கார்த்திக் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியில் பழுது ஏற்பட்டுள்ளது. உடனே அவர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு, லாரிக்கு பின்னால் இருந்த டிப்பரை மேலே உயர்த்தி உள்ளார்.

அப்போது லாரிக்கு மேலே உயர் அழுத்த மின் கம்பிகள் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததால், மின் கம்பிகள் அவருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லாரியின் டிப்பர் மெல்ல மெல்ல மேலே சென்று கொண்டிருந்தபோது, கார்த்திக் லாரி எஞ்ஜினை ஆப் செய்யாமல், லாரியை விட்டு கீழே இறங்கி வந்து, டிப்பர் மேலே செல்வதை கவனித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அங்கிருந்த உயர் மின் அழுத்த கம்பிகள் தெரிந்துள்ளது.

உடனே அவர் ஓடிச்சென்று லாரியில் ஏறி டிப்பரை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் லாரியின் டிப்பர் மேலே சென்று, உயர் அழுத்த மின்கம்பியில் உரசி விட்டது. உடனே டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்ததால், லாரியில் இருந்த கார்த்திக் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன கார்த்திக்கு திருமணமாகி மனைவியும் 2- குழந்தைகளும் உள்ளனர். சம்பவம் குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, கார்த்திக் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story