முன்விரோத தகராறில் வாலிபரை ஓட,ஓட விரட்டி கத்தியால் வெட்டிய 2 பேர் கைது பள்ளிகொண்டா அருகே பரபரப்பு


முன்விரோத தகராறில் வாலிபரை ஓட,ஓட விரட்டி கத்தியால் வெட்டிய 2 பேர் கைது பள்ளிகொண்டா அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2019 9:45 PM GMT (Updated: 2019-05-10T01:21:19+05:30)

பள்ளிகொண்டா அருகே முன்விரோத தகராறில் வாலிபரை ஓட, ஓட விரட்டி கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா அருகே வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முரளி. இவர் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மோகன் (வயது 28), பாலாஜி (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மோகன் கூலி வேலை செய்து வருகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (64) என்பவருக்கும், மோகனுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த மாதம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் சுப்பிரமணியை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியின் மகன் விஜய் (26) பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மோகன் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பள்ளிகொண்டா பஸ்நிறுத்தம் அருகே ஒரு கடையில் மோகன் நின்றிருந்தார். இதை பார்த்த விஜய் மற்றும் அவரது நண்பர் ராகுல் என்ற ராகுலன் (33) ஆகிய 2 பேரும் மோகனை வெட்டுவதற்கு கத்தியை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். இதை பார்த்த அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அப்போது அங்கு மோகனின் தம்பி பாலாஜி நின்றுக் கொண்டிருந்தார். அவரை விஜய், ராகுல் இருவரும் ஓட, ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் பாலாஜி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற விஜய், ராகுலை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விஜய் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

Next Story