பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை


பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 10 May 2019 11:15 PM GMT (Updated: 10 May 2019 10:55 PM GMT)

பயிர்இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான விவசாயிகள் திரளாக வந்து முற்றுகையிட்டனர். இவர்கள் பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறி கோஷமிட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் சிறுவயல், கிழக்கு குடியிருப்பு, நடுக்குடியிருப்பு, கடம்பூர், மஞ்சக்குளம், மேற்கு குடியிருப்பு, அலமனேந்தல், மாதவனூர், பூத்தோண்டி, வட்டகுடி, நரியனேந்தல், உரக்குடி, சிங்கனேந்தல், முந்துவார்கொண்டான், தேவிபட்டினம், குமரியேந்தல் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2017-18-ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து வேளாண் கூட்டுறவு வங்கியில் கேட்டபோது எங்களுக்கு இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

கடன் வாங்கி விவசாயம் செய்து மழையின்றி விவசாயம் பொய்த்து போனதால் வாங்கிய கடனை பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை வந்ததும் அடைத்துவிடலாம் என்று காத்திருந்த நிலையில் காப்பீடு தொகை வழங்காததது வேதனை அளிக்கிறது. கடனை அடைக்க வழிதெரியாமல் திகைத்து வருகிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுபட்ட எங்கள் பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது அங்கு வந்த விவசாய துறை அதிகாரிகள் பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை ஓரிருநாளில் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story