மது குடிக்க பணம் கேட்ட கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்
மதுகுடிக்க பணம் கேட்ட கணவன் மீது பெண் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
சிவகாசி,
சிவகாசி ரிசர்வ்லைன் திருமலை திருப்பதி நகரை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 60). குடிப்பழக்கம் உள்ள இவர் தனது மனைவி லலிதாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தினமும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க மறுத்து வந்த மனைவியை ஆதிமூலம் அடிக்கடி மிரட்டி வந்தாராம். இந்தநிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் கோவில் திருவிழா நடைபெற்றது. அதில் ஆதிமுலம் கலந்து கொண்டார். பின்னர் அவர் மனைவியிடம் பணம் கேட்டாராம். அதற்கு இல்லை என்று கூறியதை தொடர்ந்து வெளியில் சென்று விட்டு வந்த அவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த லலிதா வீட்டில் சமையல் செய்வதற்காக கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து ஆதிமூலம் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் ஆதிமூலம் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் மீது மனைவி எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story