மக்களின் 70 ஆண்டு கோரிக்கையான, அத்திக்கடவு- அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தான்நிறைவேற்றப்பட்டது - சூலூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


மக்களின் 70 ஆண்டு கோரிக்கையான, அத்திக்கடவு- அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தான்நிறைவேற்றப்பட்டது - சூலூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 10 May 2019 10:30 PM GMT (Updated: 10 May 2019 11:54 PM GMT)

மக்களின் 70 ஆண்டுகோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தான்நிறைவேற்றப்பட்டது என்று சூலூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கருமத்தம்பட்டி,

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார். அவர் முத்துகவுண்டன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து ராசிபாளையம் ஊராட்சியில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தார்.

முன்னதாக அவர் கட்சியினருடன் ஊர்வலமாக சென்று ராசிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து ராசிபாளையம், மாதப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமி சூலூர் தொகுதி ஊராட்சி மன்ற தலைவராக 20 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளார். நமது வேட்பாளரை அனைவராலும் எளிதில் அணுக முடியும். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதின் மூலம் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்து நடந்திட வாய்ப்பு வழங்குங்கள். மக்களின் 70 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தான்நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி, சத்தி, அவினாசி, திருச்சி ஆகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து விமான நிலையம் வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு செய்துள்ளது. தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திட, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து நடந்திட, தமிழகத்தில் நிலையான நல்லாட்சி நிலைத்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின்போது, பொறுப்பாளர் அருள்மொழித்தேவர் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச்செயலாளர் தோப்பு கா. அசோகன், ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, சூலூர் லிங்குசாமி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பனப்பட்டி தினகரன், ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், ராசிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பூபதி, அருகை ஜெகநாதன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story