குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 6:15 PM GMT)

கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 3-வது வார்டுக்குட்பட்ட கேசவ நகர், ராஜாஜி நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மினிகுடிநீர் தொட்டி அமைத்து ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மினிகுடிநீர் தொட்டியில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழுதடைந்த மின்மோட்டரை சரிசெய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலி குடங்களுடன் திரண்ட னர். தொடர்ந்து அவர்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பேசி வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யவும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story