குளு, குளு சீசனை அனுபவிக்க, கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் அவதி


குளு, குளு சீசனை அனுபவிக்க, கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் அவதி
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 8:12 PM GMT)

குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் நேற்று படையெடுத்தனர்.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. அவ்வப்போது வெப்பம் நிலவினாலும் மதியத்துக்கு பின்னர் மேக மூட்டம் சூழ்ந்து இதமான சூழல் நிலவுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது. இந்த நிலையில் குளு, குளு சிசனையொட்டி நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அதேநேரம் காலையில் வழக்கம் போல் வெப்பம் நிலவியது. எனினும், மதியத்துக்கு பின்னர் மேக மூட்டங்கள் சூழ்ந்து, சிறிது நேரத்தில் பல இடங்களில் இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அது சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால் சாரல் மழையில் நனைந்தபடி இயற்கையின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

மேலும் மோயர் பாயிண்ட் பகுதியை பார்வையிட்டு ரசித்தும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் பொழுதை கழித்தனர். அதேநேரம் பலர் தங்குவதற்கு விடுதிகளில் அறை கிடைக்காமல் தவித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு, அதிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அதிக குளிர் இல்லாததால் சிலர் திறந்தவெளியிலேயே படுத்து ஓய்வெடுத்தனர்.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பல்வேறு சுற்றுலா இடங்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு நீண்டநேரம் ஆனது. கொடைக்கானலில் போதிய போக்குவரத்து போலீசார் இருந்தும் நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற் பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்

Next Story