ஆரல்வாய்மொழி அருகே காம்பவுண்டு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது; 5 பேர் படுகாயம்


ஆரல்வாய்மொழி அருகே காம்பவுண்டு சுவரில் மோதி  கார் கவிழ்ந்தது; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 May 2019 11:00 PM GMT (Updated: 12 May 2019 4:15 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே காம்பவுண்டு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரல்வாய்மொழி,

நெல்லை மாவட்டம் டோனாவூர் பகுதியை சேர்ந்தவர் சாலமன் பாக்கியராஜ் (வயது 42). இவருடைய மனைவி ரோஸ்பின்(37). இவர்களுக்கு கெவின்(7), கிங்ஸ்லின்(5) என 2 மகன்கள் உள்ளனர்.

சாலமன் பாக்கியராஜ் அபுதாபியில் சமையல் கலைஞராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை சாலமன் பாக்கியராஜ் ஊர் திரும்புவதாக மனைவியிடம் கூறினார். அதைத்தொடர்ந்து ரோஸ்பின் மற்றும் அவருடைய மகன்கள் ஆகியோர் ஒரு காரில் சாலமன் பாக்கியராஜை அழைத்து வர திருவனந்தபுரத்துக்கு சென்றனர். காரை டோனாவூரை சேர்ந்த துரைமுத்து (40) என்பவர் ஓட்டினார்.

திருவனந்தபுரத்தில் இருந்து அவர்கள் சாலமன் பாக்கியராஜை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் ஆரல்வாய் மொழி அருகே வெள்ளமடத்தை அடுத்த கிறிஸ்து நகர் பகுதியில் வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள காம்பவுண்டு சுவர் மீது மோதிவிட்டு தென்னந்தோப்புக்குள் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்து அலறினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story