கரிக்காத்தூர் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


கரிக்காத்தூர் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 4:56 PM GMT)

கரிக்காத்தூர் கிராமத்தில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை,

போளூர் தாலுகா கரிக்காத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க வந்தனர். மக்கள் குறை தீர்வுகூட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அங்குள்ள புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை போட்டனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது கிராமத்தின் அருகே செல்லும் செய்யாற்றில் உள்ள கிணற்றின் மூலம் நாங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். அந்த கிணற்றை சுற்றி சிலர் சுமார் 20 அடி ஆழம் தோண்டி மணல் கடத்தி செல்கின்றனர்.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும் பள்ளம் தோண்டி மணல் திருடுவதால் கிணற்றில் இருந்து செல்லும் குழாய்கள் அனைத்தும் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த குழாய்கள் உடைய வாய்ப்பு உள்ளது. அவர்கள் நள்ளிரவில் மணலை கடத்தி ஆலப்பூண்டி காட்டில் அதை பதுக்கி வைத்து மறுநாள் இரவில் லாரி மூலம் கடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்கின்றனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.

மணல் கடத்தலை தடுக்கும் எங்கள் கிராமத்தினரை மணல் கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். அடியாட்களை வரவழைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதிகாரிகள் ரோந்து வருவதை கண்காணித்து ரகசியமாக மணல் திருட்டில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story