குன்னூர் ஏல மையத்தில், ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


குன்னூர் ஏல மையத்தில், ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 13 May 2019 7:42 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.10¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும் நீலகிரி முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். இதில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் குன்னூரில் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 9, 10-ந் தேதிகளில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு மொத்தம் 12 லட்சத்து 1000 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது.

இதில் 7 லட்சத்து 69 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 32 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 92 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.10 கோடியே 83 லட்சம். இது 92 சதவீத விற்பனை ஆகும்.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.187, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.249 என விற்பனையானது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ.94 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.112 முதல் ரூ.118 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.92 வரையும், உயர் வகை ரூ.118 முதல் ரூ.125 வரையும் இருந்தது.

குன்னூர் மையத்தில் அடுத்த ஏலம் வருகிற 16, 17-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 15 லட்சத்து 74 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

Next Story