வடமதுரை அருகே, வாக்குச்சாவடியை மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு


வடமதுரை அருகே, வாக்குச்சாவடியை மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு - உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 13 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 11:24 PM GMT)

வடமதுரை அருகே வாக்குச்சாவடியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறினர்.

திண்டுக்கல், 

வடமதுரை பேரூராட்சியில் உள்ள ஏ.வி.பட்டி கிராம மக்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் ஏ.வி.பட்டியில் இருந்து வேறுகிராமத்துக்கு வாக்குச்சாவடியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க முயன்றனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், புகார் மனு பெட்டியில் அந்த மனுவை போட்டனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், வடமதுரை பேரூராட்சி ஏ.வி.பட்டியில் சுமார் 950 வாக்காளர்கள் இருக்கிறோம். கடந்த 1952-ம் ஆண்டு முதல் எங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி உள்ளது. இதனால் நாங்கள் சிரமமின்றி அங்கேயே வாக்களித்து வருகிறோம். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஏ.வி.பட்டியில் இருந்த வாக்குச்சாவடியை சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்துக்கு மாற்றி அமைத்துள்ளனர். இதனால் வாக்காளர்கள் சிரமப்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, எங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். இதுதொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினோம். எனினும், நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

எனவே, கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்து மனு அளித்துள்ளோம். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து வாக்குச்சாவடியை வேறு கிராமத்துக்கு மாற்றுவதை தடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ரேஷன்கார்டுகளை திரும்ப ஒப்படைத்து விட்டு, உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம், என்றனர். 

Next Story