ஒரு வாக்குறுதியை ஸ்டாலின் 100 முறை சொன்னாலும் நிறைவேறாது அரவக்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு


ஒரு வாக்குறுதியை ஸ்டாலின் 100 முறை சொன்னாலும் நிறைவேறாது அரவக்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM IST (Updated: 15 May 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஆளுங்கட்சியால் தான் திட்டங்களை தர முடியும். இதனால் ஒரு வாக்குறுதியை ஸ்டாலின் 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது என்று அரவக்குறிச்சி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வி.வி.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் மற்றும் கந்தம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தான் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது. இதேபோல், அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருவதால் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியும் எங்களுக்கு உறுதியாகிவிட்டது. தாதம்பாளையம் ஏரியை தூர்வாருவது, முருங்கை தொழிற்சாலை மற்றும் கிட்டங்கி அமைப்பது, நொய்யல், அமராவதி, குடகனாற்றில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர்த்துவது போன்றவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதல்-அமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதல்- அமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இதில் அரசு சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதல்-அமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.

அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி.தினகரனின் ஆசை. தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கியதாகத்தான் இருக்கிறது. ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து விட்டு, கொச்சையான வார்த்தைகள் மூலம் தனி நபர் விமர்சனங்களை அவர் செய்து வருகிறார். என்னை, மருத்துவர் ஐயாவை (ராமதாஸ்), முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், பிரதமர் ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரிக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.

ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்-அமைச்சராவதும் ஒருபோதும் நடக்காது. இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகர ராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து எதிரணி மிகுந்த குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார். நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை, கச்சத்தீவை தாரை வார்த்தது போன்றவை தி.மு.க. ஆட்சி காலத்திலேயே அனுமதிக்கப்பட்டது.

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார். காவிரியில் மிகப்பெரிய பச்சை துரோகம் செய்தது தி.மு.க. ஜனாதிபதியாக ஸ்டாலினுக்கு தகுதியுள்ளது என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறுகிறார். அதுக்கு கூட அவர் தகுதியில்லை.

தமிழகத்துக்கு தேவையான முக்கிய திட்டங்களுள் ஒன்று கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். கோதாவரி ஆற்றில் 1,500 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் கோதாவரி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டுவருவோம் என நிதின்கட்காரி கூறியிருக்கிறார். கடலில் கலக்கும் நீரில், 1,000 டி.எம்.சியை ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்யப்படும். தமிழகத்துக்கு 200 டி.எம்.சி. கிடைக்கும். ஆனால் கர்நாடகாவிடம் இருந்து 177 டி.எம்.சி. தான் பெற முடிகிறது. அந்த வகையில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் 25 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறும். தேர்தல் முடிவுக்கு பிறகு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து இந்த கோரிக்கையை விரைவில் செயல்படுத்துவோம். எனவே இதனை நிறைவேற்றித்தர அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story