சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய சிறப்பு முகாம் சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு


சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய சிறப்பு முகாம் சட்டப் பணிகள் ஆணைக்குழு ஏற்பாடு
x
தினத்தந்தி 14 May 2019 10:15 PM GMT (Updated: 14 May 2019 9:53 PM GMT)

சிறையில் உள்ள கைதிகளின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் வகையில் சிறப்பு முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

ராமநாதபுரம்,

மத்திய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தமிழகத்தில் சிறையில் உள்ள தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், காவல் கைதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ, தெரியாமலோ குற்றம் செய்து கைதாகி சிறையில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினர், பெற்றோர் உள்ளிட்டோருக்கு செய்து கொடுக்க வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போய் விடுவதால் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு கைதிகளின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி, சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் செயலாளர் ராமலிங்கம் மேற்பார்வையில் கைதிகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள், தொண்டு நிறுவனத்தினர், சட்ட தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், சமூக பணியாளர்கள் ஆகியோரை கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் மூலம் சிறையில் உள்ள கைதிகளின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளை குழுவில் உள்ள அந்தந்த பிரிவினர் மூலம் உரிய காலத்திற்குள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இதற்காக கைதிகளிடம் விசாரணை செய்து அவர்களிடம் கலந்து பேசி அவர்களின் குடும்பத்தினர், பெற்றோர், அவர் சார்ந்த உறவினர்கள் ஆகியோருக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கைதிகளின் குடும்பத்தினருக்கு சட்டம் சார்ந்த உதவிகள் மட்டுமல்லாது அனைத்து அத்தியாவசிய உதவிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் உள்ள விசாரணை கைதிகள், காவல் கைதிகள் ஆகியோரிடம் அவரவர் குடும்பத்தினருக்கான தேவைகள், உதவிகள் குறித்து விரிவாக கேட்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முதன்மை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில் சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ராமலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் மற்றும் குழுவினர் மாவட்ட சிறைக்கு நேரில் சென்று கைதிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்த கோரிக்கைகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் ஆராய்ந்து இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மூலம் நேரில் சென்று விசாரித்து தேவையான உதவிகளை செய்து கொடுக்க உள்ளதாக மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தெரிவித்தார்.


Next Story